இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

னச் சோர்வு, ஏமாற்றம், தீயோர் நட்பு போன்றவையே ஒருவருக்குத் தீய பழக்கங்கள் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. ஒரு ஜாதகத் தில் ஐந்தாம் பாவமே ஜாதகரின் நடத்தை மற்றும் பழக்கவழக்கங்களைச் சுட்டிக்காட்டும். ஐந்தாம் பாவாதிபதி நான்காம் பாவத்துடன் தொடர்புகொண்டால், தீய பழக்கங்கள் தேடிவரும். கூடாநட்புக்குக் காரணமாக அமைவது, சனியும் செவ்வாயும் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதேயாகும். பொதுவாக, புனர்பூ தோஷம் உள்ளவர்களும், ஐந்தாம் பாவத்தில் சனி அமர்ந்து, சந்திரனையும் செவ்வாயையும் பார்க்கும் அமைப்புள்ள ஜாதகர்களும் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது கடினம் என்பதே "கந்தர்வ நாடி'யின் நிலைப்பாடு.

Advertisment

""தாண்டவக்கோனே! சப்த விடங்கத் தாண்டவங்களின் தத்துவத்தை எளியோரும் அறியுமாறு தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை பந்தாடுநாயகி கொட்டையூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு கோடீஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.

நடனராசன் உரைத்தது- ""தியானித்தால் மனம் ஒருமுகமாகும். மூலக்கனலாய் மூண்டெழும் குண்டலினி, மூலாதாரத்திலிருந்து அஜபையாகக் கிளம்பி (பாம்புபோல் ஊர்ந்துசெல்வது) ஸ்வாதிஷ்டானத்தில் குக்குடம் (கோழி) போல தத்தி நடந்து, மணிப்பூரகத்தில் வீசித்தரங்கமாய் (கடலலை) ஆர்ப்பரித்து, அனாஹதத்தில் உன்மத்தமாகி (வெறிகொண்டு ஆடுதல்), விசுக்தியில் ப்ருங்க (வண்டு) நடனமாடி, ஆக்ஞையில் கமல (தாமரை) நடனம்புரிந்து, ப்ரும்ஹரந்தரத்தில் ஹம்ச (அன்னப் பறவை) நடனத்தில் லயிக்கும். அதில் ஏழிசையும் அடங்கும்.''

22

Advertisment

""அம்பலவானரே! "ஸன்னதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய கேட்டை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், மூலம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குருவும், உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் சந்திரனும், ஆயில்யம் முதல் பாதத்தில் சனியும், சித்திரை இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், சித்திரை மூன்றாம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருமாந்துறை எனும் திருத்தலத்தில் அருள்புரியும் மிருகண்டீஸ்வரரை அன்னை பாலாம்பிகை வேண்டிப் பணிந்தாள்.

கூத்தபிரான் உரைத்தது- ""சூலினியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் தேவதத்தன் எனும் பெயருடன், காஞ்சி என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். தன் கல்வித் திறனாலும் செல்வாக்கினாலும், அவன் வாழ்ந்த ஊரின் காவல் அதிகாரியானான். அந்த ஊர்மக்களின் ஏவலனாக, காவலானாகப் பணியாற்ற வேண்டியவன் சர்வாதிகாரி யானான். அதிகாரம், குரங்கின் கைப்பட்ட பூமாலையானது. தன் விருப்பத்திற்கு மாறானவர்களை தண்டித்தான். தன்னை எதிர்த்த வினோதன் என்பவனைப் பொய்க் குற்றம் சுமத்திக் கொன்றான். வினோதனின் மனைவி நீதிகேட்டுப் போராடினாள். ஆனாலும் பயனில்லாமல் போனது. மனம் வெதும்பி சபித்தாள். அறம் பிழைத்தோனுக்கு அறமே கூற்றானது, தேவதத்தனின் ஆயுள் அகாலமானது. காலன் கைகளில் காவலன் புகுந்தான். எமகிங்கரர்கள் வெகுண்ட விழிகளும், வெறிகொண்ட பார்வையுமாக அவனை மிருகம்போல் இழுத்துச் சென்றனர். "மஹா ரௌரவம்' எனும் நரகத்தில் அடைபட்டான். "ருரு' என்ற அகோர மான்களால் வதைபட்டான். அனந்தபுரி என்ற ஊரில் ஒரு செல்வந்தர் குடியில் பிறந்து, செழிப்புடன் வளர்ந்தான். திருமணப்பருவம் அவனை வரவேற்றது. வேங்கையின் குகையில் வெள்ளாடு புகுந்தது போல, விதியின் வலையில் வீழ்ந்தான். மணந்தான் தன் நெஞ்சுக்கு இனியாளை!

அவளும் அவனைப் பிரிந்தாள் ஒரு திங்களில்! வாழ்க்கைத்துணையின்றி தனிமரமாய்த் தவிக்கிறான். முற்பிறவியில் * தாரையின் சாபத் தால், தன் மனைவி சீதையை இழந்து துன் புற்ற இராமனைப்போல ஒரு பத்தினியின் சாபத்தால் துன்புறுகிறான். வறியவர் வாழ்வில் வளமையைக் கூட்டினால் வரம் பெறுவான். அதனால், சாபம் நீங்கும்.

Advertisment

* தாரையின் சாபம்- மகளிர் அனைவரும் தினமும் போற்றவேண்டிய பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தி. தன் கணவன் வாலியை இராமன் நயவஞ்சகமாய்க் கொன்றதால் சபித்தாள். தன் மனைவியை இராமன் இழந்தான். -இராமாயணம்.

(வளரும்)

செல்: 63819 58636

__________

நாடி ரகசியம்

1. கேட்டை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சனியும், சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் புதனும் அமையும் ஜாதகர் சுய முயற்சியால் பெரும் செல்வத்தைப் பெறுவார்.

2. கேட்டை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதனும் சனியும் குருவும் சேர்ந்து அமையப் பெற்ற ஜாதகர் பெரிய தொழிலதிபராவார்.

3. கேட்டை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சந்திரனும், ஹஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் குருவும் லக்னமும் கூடியமைந்தால், ஜாதகர் வாழ்க்கைத்துணையை இளமையில் இழப்பார்.

கேள்வி: கிரக தோஷநிவர்த்திக்கான பரிகாரம் செய்யும் முறையை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: பொதுவாக, லக்னத்திற்கு ஆறாம் வீட்டதிபதியின் தசையில், எட்டாம் வீட்டதிபதி புக்தியிலோ அல்லது பன்னிரண்டாம் வீட்டதிபதியின் புக்தியிலோ அந்தந்த கிரகங்கள் தங்கள் குரூர பலத்தால் கெடுதல் செய்வார்கள். தீமை தரும் தசாபுக்திகள் துவங்கும் போதே அவரவர் ஜாதகப்படி, கர்ம விபாக சாந்தியை அனுசரித்து பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தியுண்டாகும். பரிகாரத்தைச் செய்யும்போது தசாநாதனுக்கும், புக்தி நாதனுக்கும் ஏற்புடையதாக அமையுமாறு செய்வது அவசியம். உதாரணத்திற்கு, மிதுன லக்னக்காரர்களுக்கு சனி தசையில் செவ்வாய் புக்தியோ அல்லது செவ்வாய் தசையில் சனி புக்தியோ நடக்கும் காலத்து, ஆறு, எட்டாம் வீட்டதிபதி தொடர்பால் ஆரோக்கியக் கேடும், மரண பயமும் உண்டாகும். இதற்குப் பரிகாரமாக எள்ளு கலந்த மாவினால் மிருத்யு பிரதிமை செய்து, சிவப்பு வஸ்திரத்தாலும் சிறப்பு மலர்களாலும் அலங்கரித்து, மிருத்யுஞ்ஜய ஜெபம் செய்து, தெற்கு முகமாக தானம் செய்ய அபமிருத்யு நாசமாகும். இதேபோல பரிகாரங்களை "தசா அரிஷ்ட நிவாரணி' முறையில் செய்தால் மட்டுமே பலன் கிடைக்குமென்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.